இலங்கைக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையில் நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும், அந்த கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரபிய கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் LUBAN என்ற சூறாவளியாக மாறியுள்ள நிலையில் வட அகலக்கோட்டின் 12.3இலும், கிழக்கு அகலக்கோட்டின் 62.4இலும் நிலை கொண்டுள்ளது.

அது கொழும்பில் இருந்து 2000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலைமை காற்றழுத்தம் மேலும் அதிகரித்து 24 மணித்தியாலத்திற்குள் பாரிய சூறாவளியாக அதிகரிக்கும் எனவும், அது வடமேற்கு நோக்கி பயணிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இது நிலை கொண்டுள்ள பிரதேசத்தில் இருந்து 100 - 200 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதோடு, கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Latest Offers