மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையினால் மக்கள் பாதிப்பு

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கான போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு வாவியினை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள வீதிகளினால் போக்குவரத்து செய்வதில் பெரும் கஸ்டங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேபோன்று, மட்டக்களப்பு நகரில் இருந்து வவுணதீவு பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

விமான நிலைய வீதி மற்றும் வளையிறவு பாலம் ஆகியவற்றிற்கு மேலாக இரண்டு அடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதன் காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வெல்லாவெளி-மண்டூர் பிரதான வீதியூடாகவும் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக வெல்லாவெளி ஊடாக அம்பாறைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலைமை காணப்படுமானால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Latest Offers