தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1958 குடும்பங்கள் பாதிப்பு

Report Print Navoj in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக இதுவரை 1958 குடும்பங்களை சேர்ந்த 6571 பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 541 குடும்பங்களை சேர்ந்த 1887 இடம்பெயர்ந்து 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயம், ஊரியன் கட்டு அரச தமிழ் கலவன் பாடசாலை, கட்டுமுறிவு அரச தமிழ் கலவன் பாடசாலை, வம்பிவெட்டுவான் அரச தமிழ் கலவன் பாடசாலை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்ட்டுள்ளனர்.

வாகரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு நேரடி விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தொப்பிகல பிரதான வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதையடுத்து இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயந்திரப் படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், கிண்ணையடி மற்றும் பிரம்படி தீவுகளுக்கிடையே படகு சேவை நடைபெற்று வருகிறது.

இதேவேளை மினுமினுத்தான்வெளி மற்றும் அக்கிறான ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதனால் சுமார் 250 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜபாபு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

மேலும்,தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வாகரை பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு மக்கள் குடியிருப்பு பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேச மக்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு சபையின் தவிசாளர் சி.கோணலிங்கம் பணிப்பிற்கமைய பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களை கொண்ட விஷேட அனர்த்த முகாமைத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேங்களையும், பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களையும் நேரில் கண்டு நிலைமைகளை அறிந்ததுடன், பிரதேச சபையால் மேற்கொள்ளக் கூடிய சேவைகளையும் அந்தந்த வட்டாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினர்களுடன் இணைந்து துரிதப்படுத்தி வருகின்றார்கள்.

வெள்ள அனர்த்தம் காரணமாக தற்போது வரை மக்கள் இடம்பெயர்ந்துள்ள கிராமங்களாக,

ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவின் சின்னத்தட்டுமுனை, பெரியத்தட்டுமுனை, ஊரியன்கட்டு ஆகியனவும், அம்மந்தனாவெளி கிராம சேவையாளர் பிரிவின் வம்மிவட்டவான், கோமத்தலாமடு, அம்மந்தனாவெளி ஆகியனவும், கிரிமிச்சை கிராம சேவையாளர் பிரிவின் மாவடிஓடை மற்றும் காயாங்கேணி ஆகிய கிராமங்களும் உள்ளடங்குகின்றன.

இக்கிராமங்களில் இதுவரை மொத்தமாக 562 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன், தற்போது கண்டலடி அருந்ததி பாடசாலையிலும் 54 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதேச சபையின் மூலம் இவர்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதுடன், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சி.கோணலிங்கம் தெரிவித்திருந்தார்.

Latest Offers