நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Sumi in காலநிலை

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் வீசும் காற்று கடும்வேகமாக வீசி மேலும் உக்கிரமடையும். மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலயிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்குஅப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers