மழையுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கலாம்! கடற்தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்

Report Print Sujitha Sri in காலநிலை

நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers