உன்னிச்சை குளத்தின் நீர் வற்றியது! கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள்

Report Print Kumar in காலநிலை

இலங்கையின் மிகப்பெரும் நீர்பாசனக்குளங்களில் ஒன்றாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர் வழங்கள் குளமுமான உன்னிச்சைக்குளம் கடும் வறட்சி காரணமாக நீர் வற்றி வருவதன் காரணமாக அதனை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய நீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உன்னிச்சைக்குளமான இயற்கையாக அமைந்த குளமாக காணப்படுகின்ற போதிலும் 1907ஆம் ஆண்டு குளமாக கட்டப்பட்டது.பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தததை தொடர்ந்து புனரமைக்கப்பட்டது.

33அடி நீர்கொள்ளவுகொண்ட உன்னிச்சை குளத்தில் தற்போது நான்கு அடி நீரே காணப்படுகின்றது.உன்னிச்சைக்குளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நீர்தேங்கி நிற்கும் நிலையினையும் காணமுடிகின்றது.

தற்போது உன்னிச்சைக்குளத்தில் இருந்து குடிநீருக்காக மட்டுமே நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் இன்னும் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே நீர்விநியோகம் செய்யமுடியும் எனவும் மழைபெய்யாவிட்டால் முற்றாக நீர்விநியோகத்தினை நிறுத்தவேண்டிவரும் என மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அஷார் தெரிவித்தார்.

இதேநேரம் உன்னிச்சைக்குளம் வறட்சி காரணமாக வற்றிவருவதன் காரணமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதான மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் சரியான முறையில் நீர்முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே குளத்திற்கு இந்த நிலைமையேற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனது வயதில் உன்னிச்சைக்குளம் தற்போதே நீர்வற்றும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.தமது பகுதிகளில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படும் நிலையில் தமது பகுதிக்கு அவற்றினை வழங்க இதுவரையில் யாரும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 7000க்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 229மேட்டு நில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் வறட்சி காரணமாக நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறு மக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.