தொடரும் சீரற்ற காலநிலை! இதுவரையில் ஐவர் பலி, 614 பேர் பாதிப்பு

Report Print Murali Murali in காலநிலை

வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 172 குடும்பங்களை சேர்ந்த 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், 61 குடும்பங்களை சேர்ந்த 203 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 56 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ள நிலையில், இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மன்னார் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இடியுடன் கூடிய காலநிலையின் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துகொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.