வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிப்பு! கல்முனை மாநகர மேயர் எச்சரிக்கை

Report Print Varunan in காலநிலை

அம்பாறை மாவட்டத்தில் இரு வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக கிட்டங்கி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரத்து செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தையும் ,நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி வாவியூடாக செல்லும் பிரதான பாதையில் வெள்ள நீர் வடிந்தோட தொடங்கியுள்ளது . ஆற்றுவாழைகளும் வெள்ள நீருடன் அடித்து செல்லப்படுவதால் போக்குவரத்து மிகவும் அபாயகரமானதாக காணப்படுகிறது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மழையின் காரணமாக அம்பாறை மாவட்டதிலுள்ள சிறு குளங்கள் நிரம்பியுள்ளமையினாலும் அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் அதிகரித்து செல்கின்றது.

நீர் கடுமையாக ஊடறுத்து செல்வதனால் அவ்வீதியில் பயணிக்கும் பொது மக்கள் போக்குவரத்து செய்வதை தவிர்துக்கொள்ளுமாறும் அல்லது அவசியம் பயணிக்க வேண்டியவர்கள் மிகவும் அவதானத்துடன் கடந்து செல்லுமாறும் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கீப் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.