சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பலர் இடப்பெயர்வு..

Report Print Thirumal Thirumal in காலநிலை

நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் இன்று மாலை வரையான காலப்பகுதியில் 92 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வலப்பனை மற்றும் கந்தப்பளை பிரதேசத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொகவந்தலாவ, நோர்வூட், அக்கரப்பத்தனை, டயகம, மற்றும் மாகாஸ்தோட்ட ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விவரங்கள் அவ்வப்பகுதி கிராம சேவகரிடத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதாகவும் மண்களை அகற்றும் பணிகள் முன்னடுக்கப்பட்டு வருவதுடன், ஆற்று ஓரங்கள் மற்றும் மண்மேட்டு பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் பாதிப்புகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டால் அவ்வப்பகுதி கிராமசேவகர்கள் ஊடாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுப்பதாகவும் நுவரெலியா இடர்பாடுகள் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.