மட்டக்களப்பில் அடைமழை: 1050 குடும்பங்கள் இடம்பெயர்வு

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் 1050 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதுபோன்று கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ் சியாத் தெரிவித்தார்.

சமைத்த உணவுகள், குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்ற வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிரான், ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளதாகவும் சில தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் ஒடுவதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் மக்களின் பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவிழ்ச்சியாக 16.1 மில்லி மிற்றர் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று 2ஆம் திகதி முதல் அடுத்த 24 மணித்தியாளத்தில் 100 மில்லி மிற்றர் முதல் 150 மில்லி மிற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

மேலதிக செய்தி மற்றும் படங்கள் ருஷாத்