கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Report Print Yathu in காலநிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் தொடர்ச்சியான மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் சில குளங்கள் வான்பாயவும் ஆரம்பித்துள்ளன.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரைவரை 25.2 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம், புது முறிப்பு குளம் , குடமுருட்டி குளம், பிரமந்தனாறு குளம், வன்னேரிக்குளம், கல்மடுகுளம், கனகாம்பிகைக்குளம் போன்ற குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு குறித்த குளங்களின் கழிவுநீர் ஆற்றுப்பகுதியை அண்மித்துள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதும் குளங்களிற்கான நீர் வருகை தொடர்ந்தும் காணப்படும் நிலையில் குளங்கள் நிரம்பி வருவதாகவும், மழை பெய்யும் சந்தர்ப்பங்கள், நீர் நிலைகளில் நீராடச் செல்லுதல், சிறார்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களிற்கான தேவைகள் மற்றும் பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.