சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாக பாதிப்பு

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 1651 குடும்பங்களைச் சேர்ந்த 5774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது.

இதுவரையில் மட்டக்களப்பில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 196 குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதுடன் சுகாதார பிரிவினரால் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று போக்குவரத்து பாதைகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி,ராணமடு - மாலையர்கட்டு பிரதான வீதி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் - படுவான்கரை இடையிலான போக்குவரத்து வீதியின் போக்குவரத்துகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து செய்யமுடியாத நிலையிலும் காணப்படுகிறது.

மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சைகுளம், நவகிரிகுளம், புலுக்குணாவகுளம் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களை எச்சரித்துள்ளது.

Latest Offers