கிளிநொச்சியில் கனமழையால் மக்கள் இடம்பெயர்வு

Report Print Yathu in காலநிலை

கிளிநொச்சி, கட்டைக்காடு பகுதியில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டைக்காடு பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயரும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டைக்காடு - பெரியகுளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் வீடுகளிற்குள் சென்றுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் வெள்ள நீர் வீடுகளிற்குள் உட்புகுந்த நிலையில் அங்கு வாழும் குடும்பங்களைச் சந்தித்ததுடன் அங்கு காணப்படும் வெள்ள நீர் வெளியேறும் வரை அவர்களை கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அதேவேளை குறித்த பகுதியில் வட்டக்கச்சி செல்லும் பிரதான வீதி ஊடாக நீர் குறுக்கெடுத்து பாய்வதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பிரமந்தனாறு குளம் அடைவு மட்டத்தை அடைந்து மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதயில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் வாழும் 15 குடும்பங்கள் குறித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த தொடர்மழை இன்று காலை முதல் ஓரளவிற்கு குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.