மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 18 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

Report Print Rusath in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இரண்டு வாரங்களுக்குள் 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33288 பேர் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர்மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 39 வீடுகள் பகுதி அளவிலும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. அத்தோடு மின்னல் தாக்கத்திற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகபிரிவில் ஊலாகாடு, இலுக்குவேதம், முருத்தானை, பொண்டுகள்சேனை, ஈரளகுளம், பெரியவெட்டுவான், பெருமாவெளி, அத்துடன் வாகரை பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிவு , தோனிதாட்டமடு, ஓமடியாமடு , மதுரங்கேனி ,இருமிச்சி , நாசியந்தீவு, ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைய இப்பகுதிக்கான போக்குவரத்தினை இயந்திரபடகு மூலம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒழுங்கு செய்துள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு பொருட்களை விரைவாகவும் துரிதமாகவும் செயல்படுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவத்தின் ஊடாக மேலதிக ஆளணியினை நியமித்து துரிதபடுத்தப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கிரான் பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க அதிபர் இயந்திரப் படகுகள் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers