நீரில் மூழ்கிய பல பகுதிகள்! மட்டக்களப்பில் 35 ஆயிரம் பேர் வரையில் பாதிப்பு

Report Print Kumar in காலநிலை

தொடர்மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேசசெயலகங்களை சேர்ந்த 10,738 குடும்பங்களை சேர்ந்த 35,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இன்று பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமைத்த உணவுகள் வழங்குவதற்காக, இதுவரை சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான உலர்உணவு பொருட்கள் வழங்குவதற்காக 16 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர் மழையினால் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும், 42 வீடுகள் பகுதியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெள்ளப்பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் கோரியுள்ளதாகவும், இந்நிதி கிடைக்க பெற்றதும் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அரச அதிபர் உதயகுமார் கூறியுள்ளார்.

வெள்ள பாதிப்பினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட முருத்தானை, பிரம்படித்தீவு, சாராவெளி, முறுக்கந்தீவு, அக்குறானை, நாசியந்தீவு, புலாக்காடு, வடமுனை, ஊத்துசேனை, கட்டு முறிவு, மதுரங்கேனி குளம், பெண்டுகள்சேனை கிராமங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உணவுகள் ஏனைய வசதிகளை வழங்க கூட கடினமாக காணப்படுகின்ற போதிலும் இயந்திரப்படகுகள் மூலம் உணவு பொருட்களையும், ஏனைய அடிப்படை பொருட்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றது.

மேலும் இம்மாவட்டத்தில் 11 இடங்களில் மக்கள் போக்குவரத்துக்கான பாதைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் உழவு இயந்திரங்கள், இயந்திரப்படகுகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மழை குறைந்திருந்த போதிலும் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற வெள்ள நீரினால் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் அவதானிப்புடன் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.