கிளிநொச்சியில் பலத்த காற்று! பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

Report Print Suman Suman in காலநிலை

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின்சார சபை மற்றும் ரெலிகொம் நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்துள்ளது. அத்துடன் கம்பங்களும் முறிந்துள்ளன.

இதன் காரணமாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு, பன்னங்கண்டி உள்ளிட்ட பல கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் வீசி வரும் பலத்த காற்று காரணமாக பூநகரி குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

ஆறு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.