அம்பன் சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலை தணிவு! வானிலை ஆய்வு மையம்

Report Print Murali Murali in காலநிலை
68Shares

அம்பன் சூறாவளியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தற்போது தணிந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கரையை கடந்த பின்னர் சூறாவளி முற்றிலுமாக தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் விளைவாக இரு நாடுகளிலும் 84 பேர் உயிரிழந்தனர்.

அம்பன் சூறாவளியின் தாக்கம் இன்று இலங்கை தீவின் தென்மேற்கு வரை பரவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகலை, நுவரெலியா, காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்தது.

அம்பான் சூறாவளி நேற்று பிற்பகல் வங்காள விரிகுடாவின் இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கரையை கடந்தது. இதன்போது அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீற்ற வேகத்தில் காற்று வீசியது.

இந்தியாவுக்குள் நுழைந்து பங்களாதேஷுக்குச் செல்லும்போது புயலின் அளவு குறைந்துவிட்டதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்தியாவின் மேற்கு வங்க மாகாணம் புயலால் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.