திருகோணமலையில் மினி சூறாவளி! 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Report Print Abdulsalam Yaseem in காலநிலை
115Shares

திருகோணமலை மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளியினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (30) வீசிய சூறாவளியினாலேயே இவ்வீடுகள் சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

இந்த மினி சூறாவளியினால் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ கிராமங்களில் 18 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும், கிண்ணியா பிரதேசத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கந்தளாய் பிரதேசத்தில் சில வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு தெரியப்படுத்தியதையடுத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கள விஜயங்களை மேற்கொண்டு விபரங்களைத் திரட்டியதாகவும் அதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன அவர்களின் வேண்டுகோளின்படி மொரவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் மேலும் கூறினார்.