வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறு

Report Print Gokulan Gokulan in காலநிலை

இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கிலோமீற்றர் (489 கடல் மைல்) தொலைவில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புயலாக வலுப்பெறச் சாத்தியமுள்ளதாகப் பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலும் இது புயலாக மாறவே வாய்ப்புண்டு. இந்தத் தாழமுக்கம் மிக வேகமாக நகர்ந்து வருகின்றது.

இதனால் முன்னர் குறிப்பிட்ட 23, 24,25 ஆம் திகதிகளுக்கு முன்னதாகவே வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு இதன் தாக்கம் இருக்கக்கூடும்.

இது புயலாக மாறினால் 'நிவார்' ( Nivar) என்ற பெயரே வழங்கப்படும். இது ஈரான் நாடு இட்ட பெயராகும்.

தற்போது வரை எமக்குக் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி இதுவரை கிடைக்க வேண்டிய மொத்த மழைவீழ்ச்சியில் 46% மட்டுமே கிடைத்துள்ளது.

எனவே எமக்கு ஒரு பெருமழை அவசியம். அந்தப் பெருமழை இதுபோன்ற தாழமுக்கம் அல்லது புயலினாலேயே சாத்தியம்.

ஆகவே இந்தத் தாழமுக்கம் எமக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் தாழமுக்கங்கள் புயல்கள் எப்போதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆகவே பொறுப்புக்குரிய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வதினூடாக பாதகமான விளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.