வலுவடைந்துள்ள புரெவி சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Sujitha Sri in காலநிலை
1104Shares

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள புரெவி சூறாவளியானது இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிய தகவலின் படி திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இதன் காரணமாக 80 - 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட (BUREVI) புரெவி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த தாழமுக்கமானது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது.

குறிப்பாக அதன் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும். அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப்பெய்யக்கூடும்.

இதன்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலங்களுக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

எனவே, மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல் ஊழியர் கடலுக்கு செல்ல வேண்டாம். தற்போது கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கடல் அலையானது ஒரு மீற்றர் அளவுக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Like This Video...