வவுனியா - கனகராயன்குளத்தில் 164 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவு

Report Print Theesan in காலநிலை
33Shares

வவுனியாவில் கடந்த 24 மணித்தியாலயத்தில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரேவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கன மழை பொழிந்து வருகின்றது,

இந்த நிலையில் இன்று காலை 8 மணிவரையான 24 மணிநேரத்தில் அதிகபட்டசமாக கனகராயன்குளம் பகுதியில் 164 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுங்கேணி பகுதியில் 140 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதுடன், செட்டிகுளம் பகுதியில் 101 மில்லிமீற்றரும், ஓமந்தை பகுதியில் 100 மில்லிமீற்றரும், வவுனியா நகர்ப்பகுதியில் 87.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெய்து வரும் கன மழை காரணமாக அனேகமான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

அத்துடன் வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் மேலதிக நீர் வெளியேறிவருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்ததுடன், நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு குளம் முழு கொள்ளவை எட்டி மேலதிக நீர் குளத்தின் அணைக்கட்டு வழியாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த குளத்தில் உடைவு ஏற்படாமல் இருக்க இராணுவத்துடன் இணைந்து பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.