பிரித்தானிய தாக்குதல் சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது: எலிசபெத் மகாராணி

Report Print S.P. Thas S.P. Thas in உலகம்

இசை நிகழ்ச்சியின் போது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது காட்டுமிராண்டித் தனமானது என பிரித்தானிய மகா ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.

இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களில், 22 பேர் உயிரிழந்தனர் என முதலில் வெளிவந்த செய்திகள் தெரிவித்திருந்தன.

அதேவேளை, 58-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் மகா ராணி, இந்தத் தாக்குதலானது உண்மையில் காட்டு மிராண்டித்தனமானது. மக்கள் மீது இலக்கு வைத்து காட்டு மிராண்டித் தனத்தைக் காட்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு புறமிருக்க, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில், வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களின் செயல் தான் இது.

மேலும், தாக்குதல் நடத்தியவர்களை அசுரர்களாக நான் அழைக்கப்போவது இல்லை, அப்படி அழைப்பதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

எனவே, வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் செய்யும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தது.

எனினும் பிந்திய தகவலின்படி, லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் தான் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள்.

இதேவேளை, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பக்கிங்காம் அரண்மனையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments