நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி! 5000க்கும் அதிகமானோர் படுகாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

Report Print Shalini in உலகம்

ஈரான் - ஈராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் 348 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5000இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 7.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்களாவர்.

சுமார் 8 கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈரானில் 336 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,950 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை இந்த நூற்றாண்டின் மிக ஆபத்தான நிலநடுக்கம் 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்டது,

இது 6.6 ஆக பதிவாகியிருந்தது. இதில் 26,000 பேர்வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு ஜெர்மானிலுள்ள சரன்ட் நகரத்தில் 6.4 அளவிலான நிலநடுக்கத்தில் ஏற்பட்டு அதில் 400 பேர் உயிரிழந்திருந்தனர்.

2012ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.