இந்து கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Report Print Murali Murali in உலகம்

பாகிஸ்தானில் உள்ள பழமையான இந்து கோவில் குளத்திற்கு 7 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில், கடாஸ் ராஜ் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த சிவன் கோவில் குளம் வற்றிவிட்டது.

அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை உறிஞ்சியதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இந்த குளத்திலும் நீர் வற்றியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிசார், தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

சாகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது கடாஸ் ராஜ் கோவில் குளத்தை காக்க பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடாஸ் ராஜ் கோவில் குளத்தில் 7 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்பும்படி பஞ்சாப் அரசு மற்றும் பெஸ்ட்வே சிமென்ட் ஆலை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்பு என்பதால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- Maalai Malar

Latest Offers