தாய்லாந்து குகை: 19 மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைந்தனர் - இதுவரை 8 பேரை மீட்டுள்ளனர்

Report Print Thayalan Thayalan in உலகம்
தாய்லாந்து குகை: 19 மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைந்தனர் - இதுவரை 8 பேரை மீட்டுள்ளனர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியதில், மேலும் இருவர் மீட்கப்பட்டதாகவும், அத்துடன் சேர்த்து இதுவரை 10 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள் கிழமையும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஐவரை மீட்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கியது.

19 முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். நிலைமை சாதகமாக இருந்தால், மீதமுள்ள நான்கு சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர், அவர்களோடு தற்போது உள்ள ஒரு டாக்டர், கடற்படை முக்குளிக்கும் வீரர்கள் உள்ளிட்ட 9 பேர் இன்றே வெளியில் வருவார்கள்.

இன்றைய மீட்புப் பணி முந்தைய நாளைவிட நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்றும், ஆனால், இன்றே மீட்புப் பணி மொத்தமும் நிறைவடையும் என்று நம்புவதாகவும் கடற்படை சீல்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி வழியே...

இதனிடையே, மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க உடல்நலத்துடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் சிலர் 'மகிழ்ச்சி' என்றும், குடும்பத்தைப் பிரிந்து வாடுவதாகவும் தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு சிலர் மட்டும் கண்ணாடி வழியாக குடும்பத்தினரை சந்தித்தனர்.

அவர்களுக்கு ஏதேனும் நோய்த் தொற்று உள்ளதா என்று செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளி வந்தன பின்னர் நோய் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவர்கள் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கப்படுவர்.

திங்கள்கிழமை ஒன்பது மணி நேரமாக மீட்புப் பணி நடைபெற்றது என்றும் ஞாயிறன்று நடைபெற்ற மீட்புப் பணியைக் காட்டிலும் இன்று இரண்டு மணி நேரம் விரைவாக நடைபெற்றது என்றும் மீட்புப் பணியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் சர்வதேச முக்குளிப்பு வீரர்கள் 18 பேர் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமர் நரோங் சக்கோ சட்டனாக்கோன், சம்பவ இடத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்ததோடு, அங்கிருந்த சர்வதேச முக்குளிப்பு வீர்ர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

"அனைவரும் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்குளிப்பவர்களை கொண்ட மீட்பு குழு சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சிறுவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவர்கள் பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது வழக்கமான சுவாசக் கருவிக்கு மாறானது. போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்வகையில் இப்படித் திட்டமிடப்பட்டது.

தாய்லாந்து குகையும், அது பற்றிய கதையும்: 5 கேள்வி, பதில்

BBCTAMIL

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு