தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு

Report Print Thayalan Thayalan in உலகம்

கால்பந்து பயற்சியை முடித்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி வீடு திரும்பும் போது 12 கால்பந்து மாணவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் காணாமல் போயிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 9 நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை அவர்கள் உயிருடன் இருக்கும் விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது.

அதனையடுத்து, மீட்பு குழுவினர் கடும் சவாலுக்கு மத்தியில் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு, மீட்பு குழுவினரின் நிவாரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணிகளில் நேற்று வரையில் எட்டு பேர் மீட்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், இன்றைய தினம் மற்றுமொரு மாணவன் மீட்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள மூன்று சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளரையும் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று மாலை சகல மாணவர்களும் பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், மீட்பு குழுவினரின் நிவாரண முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.