மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது!

Report Print Murali Murali in உலகம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 126 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 97 ஆண்களும், 29 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில், ஐந்து வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனை தொடர்பாக கோலாலம்பூர் குடிவரவுத்துறையின் இயக்குனர் ஹமிதி ஏடம் கருத்து தெரிவிக்கையில்,

“ஆப்ரேஷன் சபூ என்ற இச்சோதனையில் 55 குடிவரவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 226 தனிநபர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 126 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது முறையான ஆவணங்களின்றி பயணித்தது, விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல், போலியான ஆவணங்களை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்தோ, அனுமதி காலத்தை கடந்தோ வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்துகின்றது மலேசிய அரசு.

அந்த வகையில், மலேசியாவில் உள்ள வெளிநாட்டினரை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு குடிவரவுத்துறை ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, கடந்த ஆகஸ்ட் 30ம் திகதிக்குள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சரணடைவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இக்காலக்கெடு முடிவடைந்த நிலையில், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கான பல்வேறு சோதனைகள் மலேசியா எங்கும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers