அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு!

Report Print Murali Murali in உலகம்

அவுஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை, 2017 மற்றும் 2018க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.

ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கைப்படி, 2017-18 நிதியாண்டில் 9,315 சீனர்கள் பாதுகாப்பு விசா (Offshore Protection Visa) கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதுவே, கடந்தாண்டு 2,269 சீனர்கள் மட்டுமே பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த அடிப்படையில், தஞ்சம் கோரி விண்ணப்பித்த சீனர்களின் எண்ணிக்கை 311 சதவீதம் அதிகரித்துள்ளது.

திடீர் அதிகரிப்பு ஏன்?

அவுஸ்திரேலியாவுக்கு மாணவர் மற்றும் சுற்றுலா விசாவில் வரக்கூடிய பல சீனர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பது இந்த திடீர் அதிகரிப்புக்கான காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயருவதற்கான வழக்கமான விசாக்களை பெறுவது கடினமானதாக இருப்பதால், சிலர் இவ்வாறான வழியில் நுழைய முயற்சிப்பதாகவும் அஞ்சப்படுகின்றது.

பொருளாதார ரீதியாக, சீன சுற்றுலாவாசிகள் மற்றும் மாணவர்களின் வருகை அவுஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாகும். செப்டம்பர் 2018 வரையிலான கணக்குப்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் 652,158 வெளிநாட்டு மாணவர்களில் 30 சதவீதம் பேர் சீன மாணவர்களாவர்.

10% மட்டுமே விசா

2017-18ல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த 9,315 சீனர்களில் வெறும் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதுகாப்பு விசாவை வழங்கியுள்ளது அவுஸ்திரேலிய அரசு.

அதே சமயம், அரசியல் மற்றும் மத காரணங்களுக்காக துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பல உண்மையான தஞ்சம் கோரிக்கையாளர்களும் இருப்பதாக கூறுகிறார் அவுஸ்திரேலிய அகதிகள் கவுன்சிலின் கொள்கை இயக்குனர் ஜோசி சியா பதி.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்களின் மத நம்பிக்கையை பிரச்சினைக்குரியதாக பார்க்கும் சீன அரசு, அவர்களின் மத நம்பிக்கையை போக்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான உய்குர் முஸ்லிம்களை மீள் கல்வி மற்றும் தற்காலிக முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுவது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers