தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு திரும்பிய 500க்கும் மேற்பட்ட அகதிகள்!

Report Print Murali Murali in உலகம்

மியான்மரில் உள்ள தங்களது சொந்த கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்தில் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகள் நாடு திரும்புவதாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பேச்சாளர் அயோபி மெக்டொன்னெல் தெரிவித்திருக்கிறார்.

இந்த அகதிகள் சொந்த விருப்பத்தின் கீழ் நாடு திரும்பியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட இரு அரசுகளும் ஐ.நா.உதவியுடன் நாடு திரும்பலை நடைமுறைப்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக கடந்த 20ம் தேதி அன்று எல்லையைக் கடந்த அகதிகள் சில தினங்களில் மியான்மரில் உள்ள தங்கள் பகுதியை அடைவார்கள் என ஐ.நா. பேச்சாளர் அயோபி மெக்டொன்னெல் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சமூகத்தில் இணைவதற்கான அடிப்படை உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், நாடு திரும்பலை முழுமையாக ஊக்குவிக்கும் அளவுக்கு தற்போதைய சூழ்நிலை உள்ளதா என்பதை எங்களால் மதிப்பீடு செய்ய முடியவில்லை.

தென் கிழக்கு மியான்மரில் அனைத்து சமூகங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கச்செய்ய எங்களோடு தொடர்புடைய அமைப்புகளுடன் பணியாற்றி வருகிறோம்,” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது நாடு திரும்பியுள்ள அகதிகள் தாய்லாந்து- மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் முகாம்களிலிருந்து மியான்மரில் அமைந்திருக்கும் கயின் மற்றும் கயா மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

“தென் கிழக்கு மியான்மரின் நிலைமையில் முன்னேற்றம் கண்டதினால் அரசின் உதவியுடன் நடக்கும் நாடு திரும்பல் பணிக்கு 2016 முதல் ஐ.நா. அகதிகள் ஆணையம் ஆதரவளிக்கிறது,” என ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் லிஞ்ச் குறிப்பிட்டிருக்கிறார்.

தாய்லாந்து- மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் 9 முகாம்களில் 97,000 மியான்மர் அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கரேன் மற்றும் கரேன்னி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers