மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா இளம் பெண்கள் மீட்பு!

Report Print Murali Murali in உலகம்

பங்களாதேஷிலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 23 ரோஹிங்கியா இளம்பெண்களை மனித கடத்தல் கும்பலமிடமிருந்து அந்நாட்டு பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பங்களாதேஷ் - மியான்மார் எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாமிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு இப்பெண்களை 4 பேர் கொண்ட மனித கடத்தல் கும்பல் அழைத்து வந்துள்ளது.

இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு ரோஹிங்கியா இணையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 50 பங்களாதேஷ் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டாக்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது, மறைந்திருந்த இப்பெண்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மோக்லெசூர் ரஹ்மான் கூறியிருக்கிறார்.

“மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காக்ஸ் பஜார் முகாமிலிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்,” என ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

அகதிகளிடையே நிலவிவரும் வாழ்வாதார சிக்கலை பயன்படுத்தி பல மனித கடத்தல் கும்பல் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.