ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான மனு விசாரணைக்கு!

Report Print Murali Murali in உலகம்

சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து ஓராண்டுக்குள் நாடுகடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நாடுகடத்தலில் முதன்மையாக குறிவைக்கப்பட்டுள்ளவர்களாக வங்கதேச குடியேறிகளும் ரோஹிங்கியா அகதிகளும் இருக்கின்றனர்.

இது அவசர மனுவாக விசாரிக்கப்பட வேண்டும் என பாஜக வழக்கறிஞரும் செய்தி தொடர்பாளருமான அஷ்வினி உபதயா கோரியிருந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, இது தொடர்பான விசாரணை ஜூலை 9 அன்று நடைபெறும் எனக் கூறியுள்ளத.

சர்வதேச எல்லையில் உள்ள பகுதிகளை பெருமளவிலான சட்டவிரோத குடியேறிகள் ஆக்கிரமித்துள்ளதால் அது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற நபர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள், மனித கடத்தல், ஹவாலா பண மாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“மியான்மர் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்துள்ள பெருமளவிலான சட்டவிரோத குடியேறிகள் எல்லையோர மாவட்டங்களில் மக்கள் தொகை இருப்பை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையையும் பலவீனப்படுத்துகின்றனர்.

இந்தியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வங்கதேச பெண்கள் கடத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் வங்கதேச குடியேறிகளையும் ரோஹிங்கியா அகதிகளையும் சட்டவிரோத குடியேறிகளாக முத்திரை குத்துகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தை முக்கிய பிரச்னையாக பாஜக அடையாளப்படுத்தியிருந்தது.