மலேசிய அரசு அதிரடி நடவடிக்கை! சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு கெடு

Report Print Murali Murali in உலகம்

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.

‘Back for good’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வெளியேற அறிவுறுத்துகின்றது.

இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை ( இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி பேசிய கோலாலம்பூர் குடிவரவு இயக்குனர் ஹமிதி ஏடம், “இதுவரை நாடு திரும்புவதற்காக 290 வெளிநாட்டினர் பதிந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இத்திட்டத்தில் பதிவு செய்ய நினைக்கும் குடியேறிகள் விமான பயணச்சீட்டு, பயண ஆவணம், 700 ரிங்கட் அபராதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 18 அன்று இத்திட்டத்தை அறிவித்த மலேசிய உள்துறை அமைச்சர் டேன் முஹ்யிதின் யாசின், நாட்டில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை குறைப்பதற்காக ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers