மலேசியாவில் சட்டவிரோதமாக கருதப்பட்ட 474 வெளிநாட்டினர் கைது

Report Print Murali Murali in உலகம்

சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மலேசிய குடியேற்றத்துறை.

அந்த வகையில், கடந்த ஜனவரி 1 முதல் 124 தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 474 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 89 பேர் சீனர்கள், 78 பேர் வங்கதேசிகள், 42 பேர் மியான்மரிகள், 22 பிலிப்பைனியர்கள் மற்றும் இன்னும் சில நாட்டினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினரை வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த மன்னிப்புத் திட்டத்தின் கீழ், சொந்த நாட்டிற்கு திரும்ப 195,471 வெளிநாட்டினர் பதிவு செய்திருந்த நிலையில் 165,040 சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மீதமுள்ள 30,431 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவித்த மலேசிய குடியேற்றத்துறை, காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே, சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 474 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.