இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தற்காலிக தடை நீக்கம்

Report Print Banu in உலகம்

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவு குறித்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 14 ஆம் திகதி, கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் "இலங்கையில் வெளிநாட்டுக்கு சொந்தமான நிறுவனங்களை நிறுவன பதிவாளருடன் இணைப்பது (BOI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தவிர) தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நீக்கப்படும்” என்று வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவை நிறுத்துவதற்கான முடிவின் அறிவிப்பில் எந்த கூடுதல் விளக்கங்களும் இல்லை. ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களின் படியே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் தொழில்களைப் பாதுகாப்பதே இதன் பின்னணியில் உள்ள காரணம் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறிய அளவிலான வெளிநாட்டு பங்குதாரர் நிறுவனங்களுக்கு மேலதிக ஒப்புதல் வழங்குவதைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பதிவை இடைநிறுத்துவதற்கான முடிவு தலைகீழாகி விட்டது.

முன்பு போலவே நிறுவனங்களை பதிவு செய்ய ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து மேலதிக வழிமுறைகளைப் பெற்றதாகவும், எனினும் தனிப்பட்ட சேவைகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகளை எதிர்காலத்தில் மீள் ஆய்வு செய்வதற்கான தேவைப்பாடு உள்ளது.

அது ஏற்கனவே உள்ள சட்டங்களை மதிப்பாய்வு செய்து இதற்கு தேவையான மேலும் பல வழிமுறைகளை வழங்கும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.