உலகையே புரட்டிப்போட்ட மாபெரும் தொற்றுநோய்கள் - பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய பார்வை

Report Print Tamilini in உலகம்

வரலாறு பூராவும் மனித சமுதாயத்தையும் அரசியலையும் வடிவமைப்பதில் தொற்றுநோய்கள் மாபெரும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன.

6ஆம் நூற்றாண்டின் ஜஸ்டினியன் கொள்ளை நோயில் ( Justinian plaque ) இருந்து கடந்த நூற்றாண்டின் ஸ்பானிஷ் காய்ச்சல் ( Spanish Flu ) வரை, உலகளாவிய தொற்றுநோய்கள் சாம்ராச்சியங்களின் வீழ்ச்சிக்கும் மாபெரும் வல்லரசுகளும் நிறுவனங்களும் பலவீனமடைவதற்கும் காரணமாயிருந்திருக்கின்றன.

சமூக கிளர்ச்சிகளை தோற்றுவித்திருப்பதுடன் போர்களையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றன. மிகக்கொடிய தொற்று நோய்கள் சிலவற்றையும் அவை எவ்வாறு மனித வரலாற்றின் போக்கில் செல்வாக்கை செலுத்தின என்பதையும் இங்கு பார்ப்போம்.

ஜஸ்டினியன் கொள்ளைநோய் Justinian plaque

பதிவில் உள்ள வரலாற்றில் உலகளவில் மிகக்கொடிய தொற்றுநோய்களில் ஒன்று 6ம் நூற்றாண்டில் எகிப்தில் தோன்றி கிழக்கு ரோமன் சாம்ராச்சியத்தின் ( பைசான்ரைன் ) தலைநகரான கொன்ஸ்ரான்டிநோபிள் வரை விரைவாகப்பரவியது. பைசான்ரைனின் அன்றைய சக்கரவர்த்தி ஜஸ்டினியன் பெயரே அந்த கொள்ளை நோய்க்கு சூட்டப்பட்டது.

கொன்ஸ்ரான்டிநோபிளில் இருந்து மேற்கேயும் கிழக்கேயும் பரவிய அந்த நோய் 2 கோடி 50 இலட்சம் தொடக்கம் 10 கோடி வரையான மக்களைப் பலியெடுத்தது. ஜஸ்டினியனின் ஆட்சியின் கீழ் பைசான்ரைன் சாம்ராச்சியம் அதன் அதிகாரச் செல்வாக்கின் உச்சியில் இருந்த வேளையிலேயே கொன்ஸ்ரான்டிநோபிளை கொள்ளைநோய் தாக்கியது. இத்தாலி, ரோம் மற்றும் வட ஆபிரிக்கா உட்பட வரலாற்று ரீதியாக றோமன் ஆதிக்கத்தில் இருந்த மத்திய தரைக்கடல் கரையோரப் பிராந்தியங்களில் பெருமளவானவற்றை பைசான்ரைன் சாம்ராச்சியம் கைப்பற்றியிருந்தது.

வெவ்வேறு அலைகளில் திரும்பத் திரும்ப வந்த கொள்ளை நோய் சாம்ராச்சியம் கணிசமானளவு பலவீனமடைந்த பிறகு, இறுதியில் கி.பி.750 ஆண்டில் இல்லாமல் போனது. அந்த நோய் பரவலைத் தொடர்ந்து பைசான்ரைன் இராணுவம் புதிய படைவீரர்களை திரட்டி போர்களங்களுக்கு இராணுவ விநியோகங்களை உறுதி செய்யத்தவறியதனால், அவர்களது மாகாணங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

கொள்ளைநோய் கொன்ஸரான்டிநோபிளை பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதித்து அதன் போர் இயந்திரத்தை கணிசமானளவுக்கு பலவீனப்படுத்தியது. அந்த நோய் இல்லாமல்போன நேரமளவில் சாம்ராச்சியம் ஐரோப்பாவில் பிராந்தியங்களை ஜேர்மன்மொழி பேசும் பிராங்குகளிடமும் எகிப்தையும் சிரியாவையும் அரபுக்களிடமும் இழந்தது.

கறுப்பு மரணம் Black Death or pestilence

14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் தாக்கிய ' கறுப்பு மரணம் (Black Death or pestilence) என்று அழைக்கப்பட்ட கொள்ளைநோயே பதிவில் உள்ள மனிதகுல வரலாற்றில் மிகமிகக் கொடிய உலகளாவிய தொற்று நோயாகும். அது சுமார் 7 கோடி 50 இலட்சம் தொடக்கம் 20 கோடி வரையான மக்களைப் பலியெடுத்தது என்று பல்வேறு மதிப்பீடுகளில் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

1340 களின் முற்பகுதியில் இந்த கொள்ளைநோய் சீனா, இந்தியா, சிரியா மற்றும் எகிப்து ஆகிய தாக்கியது. 1347 ஆம் ஆண்டில் ஐரோப்பாவை வந்தடைந்த நோய் அந்தக் கண்டத்தின் சனத்தொகையின் 50 சதவீதமானோரைக் கொன்றது. அதன் பரவலின் விளைவான பொருளாதார மற்றும் சமூக பாதிப்புக்கள் நீண்டகாலம் தொடர்ந்தன.

உலகளாவிய தொற்றுநோய்கள் ( Pandemic ) சமத்துவமின்மையை தரைமட்டமாக்கிய ' நான்கு குதிரை வீரர்களில்' ஒன்று. போர்கள், புரட்சிகள் மற்றும் அரசின் தவறுகளே மற்றைய மூன்று குதிரை வீரர்களுமாகும் என்று ஸரன்போஃர்ட் வரலாற்றியலாளரான வால்டர் ஷீய்டெல் கூறினார்.

மேற்கூறப்பட்ட கொள்ளை நோய்(Black Death) பண்ணைக் கொத்தடிமைகளினதும் விவசாயக்கூலித் தொழிலாளர்களினதும் வேதனங்களை எவ்வாறு உயரவைத்தது என்பதை அவர் தனது " மாபெரும் சமத்துவவாதி " (Great Leveller ) என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் மரணத்துக்குப் பிறகு, தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நிலங்கள் மிகவும் ஏராளமாகக் கிடைத்தன. நில வாடகைகளும் வட்டி வீதங்களும் வீழ்ச்சி கண்டன. நிலஉடமையாளர்களுக்கு இழப்பு ஏற்படவே தொழிலாளர்கள் பயனடையக்கூடியதாக இருந்தது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் தொழிலாளர்களுக்கு கிராக்கி அதிகரிக்க வேதனங்கள் மும்மடங்காகின. பொருளாதாரம் மேம்படத் தொடங்கியதும் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு ஆகும் செலவுகள் அதிகரிப்தை தடுத்துநிறுத்துமாறு நிலவுடமையாளர் வர்க்கம் அரசாங்கங்களுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள்.

இங்கிலாந்தில் முடியாட்சி இது தொடர்பில் சட்டமொன்றை நிறைவேற்றியதையடுத்து பதற்றநிலை தோன்றி இறுதியில் அது 1381 ஆண்டில் விவசாயிகள் கிளர்ச்சிக்கு (Peasant Revolt) வழிவகுத்தது. ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையான யூதர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதற்கும் தொற்றுநோய் வழிவகுத்தது. நோயைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட யூதர்கள் கண்டத்தின் பல பாகங்களில் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.

கத்தோலிக்க திருச்சபை பலவீனமடைந்ததே கறுப்பு மரணத்தின் விளைவான மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கமாகும். நோய்பரவல் கடவுளுடனான மனிதனின் உறவுமுறையை சவாலுக்குள்ளாக்கியது என்ற யேல் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியரும் ( Epidemics and Society - From the Black Death to Present) நூலின் ஆசிரியருமான பிராங்க் எம்.ஸ்னோடன் கூறினார்.

எங்கும் வியாபித்திருக்கின்ற -- எல்லாம் அறிந்த -- விவேகியான கடவுளுக்கு தெரியாமல் எவ்வாறு இந்தகைய ஒரு அவலம் இடம்பெற்றிருக்க முடியும் ? " என்று அவர் அண்மைய நேர்காணல் ஒன்றில் கேள்வியெழுப்பினார்.கண்டம் எங்கும் காட்டுத்தீ போன்று கொள்ளைநோய் பரவியபோது மற்றைய எந்தவொரு நிறுவனத்தையும் போன்றே திருச்சபையும் செய்வதறியாது திணறியது.

திருச்சபையின் மீதும் மதகுருமாரின் மீதுமான மக்களின் நம்பிக்கையை நோய் உலுக்கியது. திருச்சபை தொடர்ந்தும் செல்வாக்குடைய நிறுவனமாக விளங்கியபோதிலும், கொள்ளைநோய் பரவலுக்கு முன்னதாக அனுபவித்த செல்வாக்கையும் வலிமையையும் மீளப்பெற அதனால் ஒருபோதுமே முடியாமல் போய்விட்டது. 16 ஆம் நூற்றாண்டின் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் (Protestant Reformation) திருச்சபையை மேலும் பலவீனப்படுத்தியது.

ஸ்பானிஷ் காய்ச்சல் Spanish Flu

முதலாவது உலகமகா யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் பரவத்தொடங்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish Flu) 5 கோடி வரையான மக்களைப் பலியெடுத்தது. கடந்த நூற்றாண்டு கண்ட மிகவும் கொடிய தொற்றுநோய் அதுவேயாகும். முதலில் ஐரோப்பாவில் தொடங்கிய காய்ச்சல் அடுத்து அமெரிக்காவுக்கும் பிறகு ஆசியாவுக்கும் பரவியது. அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா அதன் சனத்தொகையில் ஏறத்தாழ 6 சதவீதத்தினரை (ஒரு கோடி 70 இலட்சத்துக்கும் ஒரு கோடி 80 இலட்சத்துக்கும் இடையிலான எண்ணிக்கையில்) இழந்தது.

ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின் பாரிய தாக்கங்களில் ஒன்று போரின் தீர்வு முடிவின் மீதானதாக இருந்தது. ஜேர்மனியர்களையும் ஆஸ்திரியர்களையும் காய்ச்சல் பரவல் பாதித்திருந்தபோதிலும், இரு தரப்பினரதும் , இராணுவ தாக்குதல் முயற்சிகளை நோய் தடம்புரட்டிவிட்டது.

ஜேர்மனியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று காய்ச்சல் பரவலாகும் என்று ஜேர்மன் ஜெனரல் எறிக் லுடென்டோர்வ் தனது ' My War Memoirs, 1914 -- 18 ' என்ற சரிதை நூலில் எழுதியிருக்கிறார். ஜேர்மனி 1918 மார்ச்சில் மேற்கு முனையில் இளவேனில் கால தாக்குதலை தொடுத்தது. ஜூன் -- ஜூலை மட்டில் ஜேர்மன் படைப்பிரிவுகளை காய்ச்சல் தொற்று பலவீனப்படுத்திவிட்டது. "எமது இராணுவம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

காய்ச்சல் எங்கும் பரவியது. டாக்டர்கள் நினைத்தததையும் விட காய்ச்சலின் விளைவான இராணுவப் பலவீனம் மிகவும் மோசமானதாக இருந்தது " என்று அவர் எழுதினார். 1918 நவம்பர் 11 போர்ஓய்வு உடன்படிக்கை (Armistice) கைச்சாத்தானதை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. ஆனால் காய்ச்சல் உலகின் பல பாகங்களையும் மேலும் பல மாதங்களாக தொடர்ந்து வதைத்துக்கொண்டிருந்தது.

கொவிட் -- 19

ஏற்கனவே 20 இலட்சத்தும் அதிகமானவர்களுக்கு தொற்றியிருப்பதுடன் ஒன்றரை இலட்சத்தும் அதிகமானவர்களை பலியெடுத்திருக்கும் கொவிட் - 19 தொற்றுநோய் உலகத்தை எவ்வாறு மாற்றும் என்பதை இப்போதே கூறிவிடமுடியாது.

ஆனால், ஜனநாயக நாடுகளும் சர்வாதிகார ஆட்சியில் உள்ள நாடுகளும் இந்த ஆட்கொல்லி நோயின் பரவலை தடுப்பதற்காக மக்களின் நடமாட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரான உலக ஒழுங்கின் மையமாக விளங்கும் மேற்குலகம் வைரஸின் தாக்குதலினால் தடுமாறிப்போயிருக்கிறது.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின்னர் என்றுமே காணாத மட்டங்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்பின்மை வீதம் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க நிர்வாகம் உட்பட உலகம் பூராவுமுள்ள அரசாங்கங்கள் மந்தநிலைக்கான அறிகுறிகளைக் காட்டும் பொருளாதாரத்தைக் காப்பாற்ற ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்திருககின்றன.

நல்லவையோ கெட்டவையோ பேரளவிலான மாற்றங்கள் ஏற்கனவே கட்டவிழத்தொடங்கிவிட்டன.

-Stanly Johny-

- Thehindu