சீனா நாட்டில் வுகான் நகரில் என்னதான் நடக்கிறது?

Report Print Tamilini in உலகம்
1385Shares

இன்றைக்கு கொரோனா வைரஸ் தோன்றிய நகரமாகத்தான் பார்க்கப்படுகிறது, சீனாவின் வுகான் நகரம்.

ஆனால் இந்த நகரம், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு நகரம்தான். அங்குதான் உலகளவில் பிரபலமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அறிவியல், தொழில் ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து மாணவ, மாணவிகள் இந்த வுகான் நகருக்கு சென்று மேற்கல்வி படித்து வருகிறார்கள். இங்கு இந்திய விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதே வுகான் நகரத்தில்தான், கடந்த 2018-ம் ஆண்டு சீனப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியும், அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சு வார்த்தை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக பதிவானது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிறப்பிடமாக இன்றைக்கு பார்க்கப்படுகிற வுகான் நகரத்தில் இந்திய மாணவ, மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய அரசு அனுப்பி வைத்த சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி விட்டனர்.

ஆனாலும் துணிச்சலான சிலர் இன்னும் அங்கு இருக்கிறார்கள்.

ஆனாலும் வுகான் என்றால் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சோகங்கள்தான் முந்திக்கொண்டு நினைவில் வருகின்றன. உலகமெங்கும் 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கிய கொலைகார வைரஸ் தோன்றிய நகரத்தைப்பற்றி சொல்லும் போது சோகங்கள் நினைவுக்கு வருவது இயல்புதான்.

76 நாட்கள் அந்த நகரம் ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்தது. வீட்டு வாயிலுக்குக்கூட யாரும் வரமாட்டார்கள். அத்தனை கட்டுப்பாடு. அதனால்தான் அந்த நகரத்தால் இப்போது கொரோனா வைரசின் பிடியில் இருந்து மீள முடிந்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கடைசி நோயாளியும் கூட குணம் அடைந்து சமீபத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்.

இப்போது அங்குள்ள இந்தியர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலையின் தாக்கம் பற்றிய பயம் இல்லாமல் இல்லை.

அங்குள்ள இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், “கடந்த 8-ந் தேதிதான் இந்த நகரம் ஊரடங்கில் இருந்து மீண்டது. ஏராளமானோர் அப்போதுதான் முதல்முறையாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஆனால் இப்போது அவர்களும்கூட ஒன்று வேலைக்கு செல்வதற்காக வெளியே வருகிறார்கள். இல்லையென்றால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கத்தான் வெளியே வருகிறார்கள். அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸ் வந்து தாக்கும் என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது. அதனால் இன்னும் ஏராளமான மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்” என்கிறார்.

அவர் மேலும் சொல்லும்போது, “உகானில் நிலைமையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் இன்னும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்கள். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவது என்பது இன்னும் தொடர்கிறது” என்கிறார்.

ஆனால் சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் அந்த நகரத்தில், கடந்த பல நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவும் இல்லை, யாரும் உயிரிழக்கவும் இல்லை என்று சொல்கிறது.

சீனாவை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் 40 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள். அறிகுறிகள் அற்று கொரோனா வைரஸ் தாக்கியுள்ள 997 பேரில் 130 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உகானை தலைநகரமாக கொண்டுள்ள ஹூபெய் மாகாணத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 559 பேர் அறிகுறிகளற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குவது பற்றி வுகான் நகர இந்தியர் ஒருவர்கூறும்போது, “அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குவது அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி விடுகிறது. பயத்தை உண்டாக்கி விடுகிறது. இரண்டாவது அலை வந்து தாக்கும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதனால்தானோ என்னவோ வுகான் நகரம் ஊரடங்கில் இருந்து விடுபட்ட பின்னரும்கூட மக்களை வீடுகளுக்குள் முடங்குமாறு அதிகாரிகள் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகள், “ கொரோனா வைரஸ் இன்னும் உலகளவில் ஆபத்தான ஒன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்கிறார்கள்.

வுகான் வாழ் இந்தியர்கள், “இன்னும் உகான் நகரில் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டுதான் வருகிறார்கள். அறிகுறிகளே இன்றி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களை அடையாளம் காண்பதற்கு நியூக்ளிக் அமில சோதனை முறையை பயன்படுத்துகிறார்கள். யாரெல்லாம் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்களோ, அவர்களிடமும் மீண்டும் தங்களை கொரோனா வைரஸ் வந்து தாக்குமோ என்ற கலக்கம் இருக்கிறது” என்கிறார்கள்.

அதே நேரத்தில் வுகான் இந்தியர்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது பற்றித்தான் மிகுந்த கவலை கொண்டிருக்கிறார்கள். இருக்காதா பின்னே, அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் இங்கு தானே இருக்கிறார்கள்?

இதுபற்றி வுகான் வாழ் இந்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் என்னைப் பற்றித்தான் என் குடும்பம் கவலைப்பட்டது. ஆனால் நான் இப்போது அவர்களை பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். கொரோனா வைரஸ் பரவலை கண்காணித்து வருகிறேன்” என்கிறார்.

வுகான் வாழ் இந்திய விஞ்ஞானி ஒருவர் இந்தியா பற்றி சொல்லும்போது, “ஒரு சில மாநிலங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சம் முடிந்து விட்டதாகத்தான் தெரிகிறது. குழப்பமானதாக தோன்றினாலும் கூட இதற்கான பெருமை ஊரடங்குக்குத்தான் உண்டு” என்று குறிப்பிடுகிறார்.

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை பற்றி மற்றொரு வுகான் வாழ் இந்திய விஞ்ஞானியிடம் கேட்டபோது அவர், “முதலில் இந்த வைரசை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி உலகம் கவனத்தை செலுத்தட்டும், இந்த மாதிரி சர்ச்சைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என பளிச்சென பதில் அளிக்கிறார்.

அதுவும் சரிதானே?

- Maalai Malar