கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் எடுத்தல் மிகமிக அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரையில் 212 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. நாடுகள் பொருளாதார ரீதியாகவும், நோய்த் தொற்று சார்ந்தும் மாபெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் வீழ்ந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளை எடுத்தோமானால் இத்தாலி முடக்கல்நிலையை தளர்த்தியுள்ளது.
டென்மார்க்கிலும் ஊரடங்கைத் தளர்த்திய பின்னர் கொரோனா தொற்று சதவிகிதம் சற்று அதிகரித்ததாக செய்திகள் வெளிவந்தன.

பிரான்ஸ் ஜூன் வரைக்கும் அவசரகால நிலைப் பிரகடனத்தை அறிவித்து மக்களை நடமாட அனுமதித்துள்ளது.
சுவிற்சர்லாந்தும் இலங்கையும் ஊரடங்கை தளர்த்தி மே மாதம் 11ம் திகதி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளன.
அமெரிக்காவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
அமெரிக்காவில் தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துகொண்டு வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் எச்சரிகையையும் மீறி அமெரிக்கா ஊரடங்கை தளர்த்துவது கவலைக்குரியதே.
இந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு நேற்றைய தினம் மீண்டும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, ''உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும்போது கூடுதல் கவனம் எடுத்தல் அவசியம். ஊரடங்கைத் தளர்த்தினால் வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவலாம். உலக நாடுகள் இதனைக் கவனமாக அணுக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்துவிட்டீர்களா. ஆமெனில், ஊரடங்கை தளர்த்தும் ஒவ்வோர் நாடும் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் 6 விடயங்களை கவனத்திற் கொள்ளல் மிகமிக அவசியம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.
அவையாவன;-
1- உங்கள் நாட்டில் நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளதா
2. சுகாதார அமைப்புகள் "ஒவ்வொரு தொற்றாளர்களையும் கண்டறிந்து, சோதித்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து, மற்றும் ஒவ்வொரு தொற்றாளர்களோடு தொடர்புடையவர்களையும் கண்டறிய முடியுமா
3. வைத்தியசாலைகள், நர்சிங் ஹோம் போன்ற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கொரோனா தொற்று அபாயங்கள் குறைக்கும் வசதிகள் உள்ளனவா
4. பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா
5. புதிதாக அடையாளம் காணப்படும் நபரை சோதனைக்குட்படுத்தி சமூகத்தில் பரவவிடாது கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா
6. சமூகங்கள் அதாவது மக்களுக்கு கொரோனா பற்றிய முழுமையான அறிவை அதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப்பட்டதா....
இவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்றி கொரோனாவின் வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமாயின் ஊரடங்கைத் தளர்த்தலாம் எனவும் கூறியிருந்தார்.
உலக சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்த விடயங்கள் பின்பற்றக்கூடிய நிலையிலா இலங்கை இருக்கின்றது..
இக் கொரோனா சூழ்நிலையில் சற்றேனும் இலங்கை அரசாங்கமும் மக்களும் சிந்தித்து செயற்படுவது மிகவும் அவசியம்.
இலங்கையில் இதுவரையில் 797 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
World Health Organization chief @drtedros warned that the risk of returning to lockdown remains ‘very real’ if countries don’t manage the transition from restrictions extremely carefully https://t.co/EOolL869o4 pic.twitter.com/KDKvHrH7rA
— Reuters (@Reuters) May 6, 2020