அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் முக்கியம் பெறும் ஆசியப் பெண் கமலா ஹரிஸ்

Report Print Gokulan Gokulan in உலகம்
195Shares

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் போன்ற மாறுபட்ட தன்மையுடைய ஜனநாயகங்களிலே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை கொண்ட இனத்துவ அடையாளமே அரசியலை பெரும்பாலும் ஒழுங்கமைக்கிறது என கலிபோர்னியாவின் சாந்த பார்பரா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் அமித் அஹுஜா தெரிவித்துள்ளார்.

இந்திய மரபுரிமையைக் கொண்ட கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் எழுதிய கட்டுரையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மரபுரிமையைக் கொண்ட கறுப்புப் பெண்மணி என்று அடையாளப்படுத்தப்படுகின்ற கமலாதேவி ஹரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டது தெரிந்ததே.

அமெரிக்க வாக்காளர்களில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் 12 சதவீதத்தினராக மாத்திரம் இருக்கின்ற அதேவேளை, இந்திய - அமெரிக்கர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர்.

இவ்விரு குழுவினரிலும் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கமலா ஹரிஸுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கெனவே மூன்று பெண்கள் போட்டியிட்டார்கள். அவர்கள் அனைவருமே தோல்வி கண்டனர் என்பது வரலாறு.

அவ்வாறிருக்கையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடென், அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தல் என்று பலரும் அழைக்கின்ற எதிர்வரும் நவம்பர் தேர்தலில் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸை ஏன் தேர்ந்தெடுத்தார்?

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் போன்ற மாறுபட்ட தன்மையுடைய ஜனநாயகங்களிலே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை கொண்ட இனத்துவ அடையாளமே அரசியலை பெரும்பாலும் ஒழுங்கமைக்கிறது.

ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, வாக்காளர் தளமொன்றை கொண்டிருப்பது மாத்திரம் போதுமானதல்ல் என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த வாக்காளர் தளம் வாக்களிப்பில் முறையாக கலந்து கொள்கிறதா, இல்லையா? என்பது முக்கியமானது.

கமலா ஹரிஸின் தெரிவு கறுப்பர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவை பேணிக் காக்கும். ‘கறுப்பின உயிர்களும் முக்கியமானவை’ (Black Lives Matter) என்ற இயக்கத்தினாலும் பெண்களின் இயக்கங்களினாலும் சுறுசுறுப்படைந்திருக்கும் இவ்விரு குழுவினரும் நவம்பர் தேர்தலில் தங்களது வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பார்கள்.

ஜமெய்க்காவை சேர்ந்த தந்தையாருக்கும் இந்திய தாயாருக்கும் பிறந்த கமலா ஹரிஸும் அவரது சகோதரி மாயா ஹரிஸும் கறுப்பினத்தவர்களாகவே வளர்க்கப்பட்டவர்கள். வரலாற்று ரீதியாக கறுப்பினத்தவர்கள் கற்கும் கல்வி நிறுவனமான வொஷிங்டனிலுள்ள புகழ்பூத்த ஹாவாட் பல்கலைக்கழகத்திலேயே கமலா படித்தார்.

கறுப்பர்கள் வாக்காளர் தொகையில் 12 சதவீதத்தினராக இருந்தாலும் ஜனநாயகக் கட்சியின் வாக்குப் பங்கில் 25 சதவீதத்துக்கு அவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். இதனால் ஜனநாயகக் கட்சிக்குள் அவர்களுக்கு பெரும் செல்வாக்கு இருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறில்லை. அவர்களின் வாக்குகளுக்காக குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியுடன் போட்டாப்போட்டிக்கு செல்வதுமில்லை. கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியினருடனேயே இருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் கறுப்பு வாக்காளர்களில் 10 பேரில் 9 பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கே வாக்களித்தார்கள். அதனால் இரு கட்சி முறையொன்றில் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் வாக்காளர்கள் என்ற பிரிவில் கறுப்பர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

பொலிஸாரின் வன்முறைகளினால் கொடுமைக்குள்ளாகியும் தொற்று நோயினால் பாரதூரமான பாதிப்புக்குள்ளாகியும் இருக்கும் ஆபிரிக்க அமெரிக்க வாக்காளர்கள் தாங்கள் குறைத்து மதிப்பிடப்படுவதனால் சலிப்படைந்திருக்கிறார்கள்.

இந்த அநீதியே ‘கறுப்பின உயிர்களும் முக்கியமானவை’ என்ற இயக்கத்தை உத்வேகப்படுத்தியது. அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்திருக்கும் இந்த வாக்காளர்கள் தங்களை அலட்சியம் செய்தமைக்காக ஜனநாயகக் கட்சியை தண்டிப்பதற்கு வாக்களிக்க செல்லாமல் இருக்கக் கூடும்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கறுப்பினத்தவர்கள் மத்தியிலான வெறுப்புணர்வின் அறிகுறியை காட்டியிருந்தது. கறுப்பினத்தவர்களின் வாக்களிப்பு வீதம் பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்சிகன் மற்றும் புளொரிடா போன்ற ஊசலாடும் தன்மையுடைய (Swing States) மாநிலங்களில் வெற்றிப் பெறுவதற்கு முக்கியமானதாகும்.

2016ஆம் ஆண்டில் இந்த நான்கு மாநிலங்களிலும் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். இதை பைடெனும் ஜனநாயகக் கட்சியும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

பலம் பொருந்திய – கவர்ச்சியுடைய கறுப்பின வேட்பாளரான ஹரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதால் கறுப்பு வாக்காளர் மத்தியில் வாக்குவீதம் மேம்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்க வாக்காளர்களில் 10 பேரில் 7 பேர் வெள்ளையர்கள். கறுப்பின வாக்காளர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதன் மூலம் வெள்ளையின வாக்காளர்களிடமிருந்து அந்நியப்படக்கூடும் என்ற அமெரிக்க அரசியலிலிருக்கும் பழைய பீதிக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது.

குடியேற்றவாசி என்ற அடையாளம் உட்பட பன்முக அடையாளங்களை அவர் அரவணைத்திருப்பது அவரின் சரிதையில் மிகவும் குறிப்பிடத்தக்க மிகவும் பிரத்தியேகமான ஒரு அம்சமாகும்.

அமெரிக்காவில் மிகவும் கூடுதல் சனத்தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவில் (அங்கு கறுப்பினத்தவர்கள் 5.8சதவீதத்தினர் மாத்திரமே) ஜனநாயகக் கட்சி தனது அரசியல் அனுபவங்களை வளர்த்துக் கொண்டவர் கமலா ஹரிஸ்.

தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு கறுப்பர்களுக்கு அப்பால் தனது ஆதரவை பெருப்பித்துக் கொள்வதற்கு அவர் தனது பன்முக அடையாளங்களுக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்தது. கலிபோர்னியாவில் வெள்ளையினத்தவர்கள் மற்றும் ஸ்பானிக் (ஸ்பானிய அமெரிக்கர்கள்) சமூகங்கள் மத்தியில் கமலா ஹரிஸினால் ஆதரவை கட்டியெழுப்பக்கூடியதாக இருந்தது.

அந்த ஆற்றல் தேசிய மட்டத்தில் அவரது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு உதவ வேண்டும்.

வாக்காளர் தெரிவுகளை வெள்ளையினம் ஊக்கப்படுத்துகிறது. ஆனால், பால்நிலை வாக்காளர்களின் நடத்தைகளில் அதேபோன்ற செல்வாக்கை செலுத்துவதில்லை.

வெள்ளையினப் பெண்கள் ஹிலாரி கிளிண்டனையும் விட (45சதவீதம்) டொனால்ட் ட்ரம்புக்கு (47சதவீதம்) சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கூடுதலாக வாக்களித்தார்கள். ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட முதல் பெண்மணியாக (வெள்ளையரும் கூட) இருந்த அதேவேளை, ட்ரம்ப் அப்பட்டமான ஒரு பெண் வெறுப்பாளர் என்பதும் இந்த வாக்கு வித்தியாசத்துக்கு காரணம்.

கமலா ஹரிஸ் மிடுக்கான, தகுதிவாய்ந்த பெண்மணி. தேவையான அனுபவங்களுடன்தான் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், அவரின் இத்தகைய குணாதிசயங்கள் வாக்காளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக மனமறிந்தும் அறியாமலும் இருக்கின்ற பக்கச்சார்பிலிருந்து அவரை பாதுகாக்கவில்லை.

அதுவும் குறிப்பாக தப்பபிப்பிராயம் அல்லது முற்சாய்வு என்பது வெள்ளையினத்தவர்களல்லாத பெண்கள் மீது மாத்திரமே கடுமையானதாக இருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே செனட்டர் கமலா ஹரிஸ{க்கு எதிராக கோவக்கார கறுப்பு பெண்மணி என்ற பழிப்பு வார்த்தையை கட்டவிழ்த்துவிட்டு அவரை அருவருக்கத்தக்க, பைத்தியக்காரத்தனமான, ஒழுக்கக்கேடான, மட்டரகமான பெண்மணி என்றும் அழைக்கிறார்.

ட்ரம்ப் செய்கின்ற அவமதிப்புகளினாலும் மீ ரூ இயக்கத்திடமிருந்து (Me Too Movement) தொல்லை கதைகளினாலும் ஆத்திரமடைந்த பெண்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து அணிதிரண்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ட்ரம்புக்கு எதிராக பெண்களும் வெள்ளையரல்லாத இனத்தவர்களும் ஊக்கத்துடன் கிளம்பியிருக்கும் இந்த வரலாற்று முக்கியத்துமிக்க சந்தர்ப்பத்தை தங்களுக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்தி பயன்பெறுவதற்கு பைடெனும் ஜனநாயகக் கட்சியும் முழுஅளவிலான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

பெண் வாக்காளர் மத்தியிலான ஆதரவை பொறுத்தவரை ட்ரம்பை விடவும் 25 புள்ளிகள் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் பைடென், கமலா ஹரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்த பின்னர் அந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்.

கமலா ஹரிஸின் இனமும் பால்நிலையும் கவனத்தை ஈர்த்திருக்கின்ற அதேவேளை, அவரது தோலின் வண்ணச்சாயல் (Skin Tone) அத்தகைய ஒரு கவனத்தை பெறவில்லை. அவரது மேனியின் நிறம் அவரது நியமனத்துக்கு வெளிப்படையாகவே முக்கியமானதாக இல்லாதிருந்திருக்கலாம்.

உட்கிடையான மன புறத்தூண்டல்கள் (Implicit Impulses) அவரது முன்மரபை புரியவைக்கக்கூடும். கமலா ஹரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார். தோற்றச்சாயலிலும் அவர் கறுப்பராகவே தெரிகிறார். கறுப்பர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான மேனி வண்ணங்களில் ஒரு வெளிறிய தன்மையுடையவராக இருக்கிறார்.

அவரது தோலின் வண்ணச்சாயலின் வெளிறிய தன்மை அவருக்கு வாக்காளர்களின் ஆதரவை மேம்படுத்துகிறது என்று வேட்பாளரின் தோல் வண்ணச்சாயல் தேர்தலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வொன்று கூறுகிறது.

ஆபிரிக்க - அமெரிக்கர்கள் மத்தியில் தேர்தல் மூலம் தெரிவாகின்ற பதவிகளுக்காக போட்டியிடுகின்றவர் யார் என்பதை தோலின் நிறம் எதிர்வு கூறுவதில்லை என்கின்ற அதேவேளை, அது தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிப் பெறுகின்றார் என்பதில் தாக்கத்தை செலுத்துகிறது.

இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்க வாக்காளர்களில் ஒரு மிகமிக சிறிய பங்கினராக இருக்கின்றனர். அவர்களில் சிலர் ஊசலாடும் தன்மையுடைய மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

அத்துடன் ஏனைய அண்மைக்கால குடியேற்றவாசிகளை போன்று தேர்தலில் வாக்களிக்கும் வீதமும் தாழ்வானதாக இருக்கின்றது. இந்திய அமெரிக்கர்களும் இந்தியர்களும் கமலா ஹரிஸ் குறித்து பெருமைப்படுவது சரியானது.

நவம்பரில் அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவாரேயானால், அது இந்திய பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் என்ற வகையில் முக்கியமான ஒரு சாதனையாக அமையும் என்றாலும், தனது இந்திய மரபுக்காக அவர் தேர்தலில் களமிறங்கவில்லை என்பதை மனதில் கொள்வது மிக முக்கியமானதாகும். அவரின் அடையாளத்தின் ஏனைய கூறுகள்(அவற்றில் அவரது தகுதியும் திறமையும் முக்கியமானவை) தெரிவுக்கு காரணமானவையாக இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.