இலங்கை தேசத்தை பல்வேறு நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

Report Print TGTE Canada Media in உலகம்

இலங்கை தேசத்தினை பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கு, தடைக்கல்லாக இருக்கும் இறைமைக்கான விதிவிலக்கு விதியினை மக்கள் சக்தியின் மூலம் மாற்ற அனைவரையும் ஒன்றிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்தியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது.

பிரம்டனில் இருந்து 14 நாட்களாக 424 கிலோ மீற்றர் தூரத்தை நால்வரும், மொன்றியலில் இருந்து 7 நாட்களாக 220 கிலோ மீற்றர் தூரத்தை மூவருமாக வைத்த ஒவ்வொரு காலடியும், விடுதலையின் தூரத்தினை குறைக்கும் நீதிக்கான நெடுநடைப்பயணம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த ஆகஸ்ட் 30ஆம் நாள் பிரம்டன் நகரசபை வாயிலில் இருந்து இந்த நெடு நடைப்பயணம் தொடங்கியிருந்தது.

நீதிக்கான இந்த நெடுநடைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்த கனேடிய அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ் சமூக, அரசியல் பிரமுகர்கள், தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

நெடுநடைப்பயணத்தின் தொடக்க நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் Ruby Sahota தனது தோழமையினை வெளிப்படுத்தியிருந்ததோடு, நெடுநடைப்பயண செயல்வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி இருந்தார்.

தமிழ் சமூக-அரசியல் பிரமுகர் லோகன் கணபதி வன்னி வீதியில் தோழமையுடன் இரண்டாம் நாள் நெடுநடைப்பயணத்தினை தொடக்கி வைத்திருந்தார்.

இந்நாளில் தமிழ்த் தாய் மன்றமும், டூறம் தமிழ் சங்கமும் சேர்ந்து வரவேற்பு கொடுத்திருந்தனர். இந் நிகழ்வில் விஜய் தணிகாசலம் , யாழினி ராஜகுலசிங்கம் TDSB Trustee ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மூன்றாம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கலந்து கொண்டு தோழமையோடு உற்சாகப்படுத்தியிருந்தார்.

Mark Holland, Garnett Genuis, Jennifer O'Connell, Federal NDP leader Jagmeet Singh, Brampton Mayor Patrick Brown, Logan Kanapathi, Doly Begum, Gurratan Singh ரொறன்ரோ முன்னாள் நகரசபை உறுப்பினர் நீதன் சாண் ஆகியோர் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான தமது தோழமையினை வெளிக்காட்டியிருந்ததோடு, இலங்கைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பன்னாட்டு நீதியின் அவசியித்தினை வலியுறுத்தியிருந்ததோடு, நடைப்பயண செயல்வீரர்களுக்கு தமது தோழமையழனையும் உற்சாகத்தினை காணொளி வாயிலாக வழங்கியிருந்தனர்.

Shaun Chen, Omar Alghabra, Minister Navdeep Bainsஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி தமது தோழமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

13ஆம் திகதி ஒட்டாவா தமிழ் அமைப்புகள் வரவேற்பு கொடுத்திருந்தார்கள். இறுதி நாள் நிகழ்வில் Tim Uppal கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

நெஞ்சுறுதியுடன் இடைவிடாது நீதிக்காய் நடைநடையாய் நடந்த இந்நெடு நடைப்பயணத்தின் செயல்வீரர்களுக்கு தோழமை கொடுக்கும் வகையில் தமிழ் உறவுகள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் என்பது அடக்குமுறையின் ஒரு வடிவமாக மட்டுமல்லாமல், அது இனஅழிப்பின் கருவியாகவும் உள்ளதோடு, தமிழர்கள் இலங்கை அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இன அழிப்பினை குறித்துரைத்துக் கொள்வதோடு, அதற்கான பன்னாட்டு நீதியினை இந்நெடு நடைப்பயணத்தின் ஊடாக வலியுறுத்தி இருந்தது.

தமிழர்கள் மீதான இனப்படுகொலை என்பது தனிநபர்களாலோ அல்லது குறிக்கப்பட்ட இராணுவ குழுவினாலோ நடத்தப்பட்டது அல்ல. மாறாக இலங்கை எனும் தேசத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இதனை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ முனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை எடுத்து காட்டுகின்றது.

இலங்கை தேசத்தினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எமது ஈடுசெய்ய நீதிக்கான போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

ஆயினும் இலங்கை தேசத்தினை பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கு, இறைமைக்கான விதிவிலக்கு (State immunity Act) விதி , தடை கல்லாக இருக்கின்றது.

தடைக்கல்லாக இருக்கும் இந்த விதியினை மக்கள் சக்தியின் மூலம் மாற்றலாம். அதற்கான முதற்படியாக நெடுநடைப்பயணத்தில் மனுவில் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தினை நீக்கும் மக்கள் போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான படிக்கல்லாகவும் அமையும்.

இக்கோரிக்கை தொடர்பாக கனேடிய பிரதான பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருப்பது நமக்கு உற்சாகம் தருகின்றது.

இதன் அடிப்படையிலான மக்கள் போராட்டத்துக்கு கனடா வாழ் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்புகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.