தமிழின அழிப்பை இருட்டடிப்பு செய்யும் ஐ.நா: தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆதங்கம்

Report Print Dias Dias in உலகம்

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பை இருட்டிப்புச் செய்ய ஐக்கிய நாடுகள் சபை முயலுவதாக தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது .

ஒக்டோபர் 02ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்

அந்தவகையில் அமர்வின் இரண்டாவது நாளான 15ஆம் திகதி அன்று நடைபெற்ற பிரிவு 2 - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை மற்றும் OHCHR மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் தொடர்பான பொது விவாதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் பிரதான அவையில் மூன்று உரைகளைப் பதிவு செய்துள்ளனர்.

முதலாவதாக உலக பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பின்(Association pour les victimes du Monde) சார்பாக உரையாற்றிய ரமேசு கோவிந்தசாமி , மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையர் வழங்கிய அறிக்கைக்கு நன்றி கூறி, தனது அறிக்கையில் சிங்கள இனவாத அரசு தமிழ் ஈழத்தை அபகரித்துகொண்டதை மறந்துவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் போர் குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். அதுபோல போர் குற்றவாளியான முன்னாள் இராணுவ அமைச்சர் இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கிறார். இவர்களது 10 மாத சர்வாதிகார ஆட்சிகாலத்தில் ஈழத்தமிழர்கள் தங்களது சுதந்திரம், அடையாளம், சமயம், நிலம் ஆகியவற்றை இழந்துவிட்டனர்.

அதுபோல முள்ளிவாய்க்கால் நினைவு, கறுப்பு யூலை நினைவு, 17 நாட்கள் நீர், உணவு இல்லாமல் தனது வாழ்வை அர்பணித்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஆகிய நினைவு நாட்களை நினைவுகூற தடைவிதித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தெருவில் நின்று நீதிக்காக போரடிக் கொண்டிருக்கின்றனர், பதினொரு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் அனைவரும் இந்த உயரிய மன்றத்திடமிருந்து நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

11 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புகள் உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூர்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைய சிங்கள பேரினவாத அரசும், காவல்துறையும், இராணுவமும் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்களை மிரட்டி, துன்புறுத்தி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற தடைவிதித்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதற்காக சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் பௌத்த துறவிகளும், ஊடகங்களும் அவரை எதிர்க்கின்றன, மிரட்டுகின்றன.

ஆனால் உலக நாடுகள் அமைதிக் காக்கின்றன என சுட்டிக்காட்டியதுடன் இலங்கையை உலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்றும் வடக்கு - கிழக்கு இராணுவமயமாக்கலையும் காலனியாக்குவதையும் நிறுத்துவேண்டுமென்றும் ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக பாலம்( Le Pont ) அமைப்பின் சார்பாக தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் சிவலோகநாதன் துசாந்தினி கருத்துத் தெரிவிக்கையில்,

மனித உரிமை ஆணையத்தினது உயர் ஆணையரின் அறிக்கையில் ஈழத்தமிழர் நீதியைப்பற்றி எவ்வித கருத்தும் இடம்பெறவில்லை.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்ட்டுள்ளது என்பதை தனது அறிக்கையில் பதிவுசெய்யவில்லை. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது என்று அவரது அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

இராணுவ கட்டுப்பாட்டில்தான் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தீவிரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

11 ஆண்டுகளாக இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்துவருகின்றனர். அதனால் தமிழ் தாய்மார்கள் தங்களது உறவுகளை இழந்து நீதிக்காக 1400 நாட்கள் காத்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் சிங்கள பேரினவாத இராணுவத்தின் துன்புறுத்துதலுக்கு உட்பட்டு அவதியுறுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, மட்டகளப்பு ஒருங்கிணைப்பாளர் அமல்ராசு அமலநாயகி,கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரியசுரேசு ஈசுவரி, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செபஸ்தியான் தேவி ஆகியோர் தொடர்ந்து இராணுவ கட்டுப்பாட்டிலும் துன்புறுத்துதலிலும் கண்காணிப்பிலும் இருக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் எனது நிறுவனம் 39 நாடுகளில் உள்ள 3000 தொண்டு நிறுவனங்களுடனும் மற்றும் ஐ.நா வின் பொருளாதார மற்றும் சமூக சபையின் ( Ecosoc) அங்கீகாரம் பெற்ற 118 அரசுசாரா அமைப்புக்களுடனும் மேலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து இரண்டு அறிக்கைகள் எழுதி, A/HRC/40/NGO/218 கீழும் மற்றும் A/HRC/40/NGO/248 கீழும் பாரதி பண்பாட்டு பிரான்கோ-தமிழ் என்ற அமைப்பால் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கைக்கென தனி சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவும். பன்னாட்டு நடுவர்மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தமிழ் மக்களின் நிலங்களை திரும்பகொடுக்கவேண்டும். இராணுவத்தை அகற்றவேண்டும். வடக்கு - கிழக்கு மகாணங்களில் நடைபெறும் பண்பாட்டு அமைப்பு இனஅழிப்பும், மரபுமீது நடத்தப்படும் வெறுப்பு அரசியல் குற்றங்களை கவனிக்க அதிக முயற்சியும் கவனமும் தேவைபடுகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை காலனியாக்குவதை நிறுத்தவும். தீர்மானங்களை வழிமொழிந்த நாடுகள் இலங்கைக்கான தனி சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தி, உண்மைகளை உலகிற்கு உணர்த்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மூன்றாவதாக தமிழ் உலகம் ( Tamil Ulakam ) என்ற அமைப்பின் சார்பாக அருட்தந்தை ஆரோக்கியசாமி குழந்தைசாமி கருத்துத் தெரிவிக்கையில், உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்ட மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையரின் அறிக்கையை வரவேற்றார். ஆனால் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் நடைபெறும் அமைப்புமுறை, பண்பாட்டு இனஅழிப்பை பதிவுசெய்ய மறுத்ததைச் சுட்டிக்காட்டினார்.

நிலம், மொழி, நூலகம், தொழில், ஊர்கள், பொருளாதார முறைகள், அரசியல் அமைப்புகள், சமய வாழ்வு, பழக்கவழக்கம், தொல்லியல் தரவுகள் ஆகியவை தவிர்க்க முடியாத இலங்கையில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களும் தமிழர் நாகரீகத்தின் ஆதாரங்களாகவும் இருக்கின்றன. தமிழ் இனக்குழுவின் தேசிய அடையாளமாக இருக்கின்றன. தமிழ்த்தேசியம் முற்றிலும் சிங்கள தேசியத்தைவிட மாறுபட்டது.

சிங்கள பௌத்த வகுப்புவாத இராணுவம் தொடர்ந்து பண்பாட்டு இனப்படுகொலையை செய்துவருகின்றது. 1981 அம் ஆண்டு யூன் 1 நாள் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் திட்டமிட்டு தமிழ்ப் பண்பாட்டின் நாடித்துடிப்பாகவும் ஊற்றாகவும் விளங்கிய 97, 000 தமிழ் நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்ட யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தனர்.

இன்று வடக்கு - கிழக்கு மகாணங்களில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழியும் பண்பாடும் தெரியாத சிங்கள இராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். சிங்கள பௌத்த இராணுவத்தாலும் தொல்லியல் துறையாலும் திருகோணமலையில் இந்து கோவில்களை குறிக்கும் தமிழ்மொழி அடையாளங்களை அழித்து சிங்களமொழி அடையாளங்களை திணித்தலும் கிளிநொச்சியில் திட்டமிட்டு தமிழர் நாகரீகத்தின் அடையாளங்களை அழித்தலும் ஒரு திட்டமிட்ட தமிழர் பண்பாட்டு இனஅழித்தல்களாகும்.

லங்கா பட்டுனா, சகாமா போன்ற சிங்கள பெயர்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாக்கமம் என்ற தமிழ் ஊர்களுக்கு அதிகாரபூர்வமாக கொடுப்பது ஒரு திட்டமிட்ட தமிழ்ப் பண்பாட்டு அழித்தலாகும்.

இந்த வகுப்புவாத அரசால் பண்பாட்டு அடையாளங்களையும் தமிழ்த் தொல்லியல் தடயங்களையும் அழிப்பது ஒரு பண்பாட்டு அழித்தலாகும்.

ஈழ மண்ணில் வாழும் தமிழர்கள் உலக நாடுகளையும் ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்தையும் உலக மனித உரிமை அமைப்புகளையும் பின்வருமாறு கேட்கின்றனர். இந்த பண்பாட்டு இனஅழிப்பையும், ஈழத்தமிழர்களின் தாய்நாட்டில் உள்ள பள்ளிகளில், கல்விநிலையங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்; இலங்கை பிரச்சினைகளை ஆராய தனி சிறப்பு அமர்வுகளை நடத்துங்கள், உல குற்றவியல் நடுவர்மன்றத்தில் பதிவுசெய்யுங்கள், இலங்கைக்காக சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அராய்ந்து உலகிற்கு எடுத்துக் கூறவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவமயமாக்குவதையும், காலணியாக்குவதையும் நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்..