தமிழின அழிப்புகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன; பிரித்தானிய எம்.பி சிபோன்

Report Print Dias Dias in உலகம்

தமிழின அழிப்புகள் இலங்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டோனக் தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் வரலாறு மையத்தின் மகளிர் அணியினரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நிகழ்வு என்பன மகளிர் அணியின் பணிப்பாளர்பத்மினி தலைமையில் தற்கால கோவிட் 19 பெரும்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு குவியம் ( Zoom ) இணைப்பு வழியாக நேற்று பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 ஆரம்பமாகி மாலை 4.30 வரை மிக விமர்சையாக பலரின் இணைய வழி ஒருங்கிணைப்புடன் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இப்படியான ஒரு சோதனையான காலமாக இருக்கும் என்று எவரும் இன்நேரம் கடந்த வருடத்தில் சிந்தித்ததில்லை. இலங்கை அரசாங்கமோ, உலக பெண்கள் தினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாது தாங்கள் பெண்களின் சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக முழக்கம் இடுகின்றது.

ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர்கள் கூறும் அந்த முழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலம் கடந்து விட்டதுஎனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது போரின் போது நடந்த அனர்த்தங்களை நினைவு கூர்ந்த சியோன் அவர்கள் குறிப்பாக பெண்களுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் எதிராக இலங்கை அரசாங்கம் நடத்திய போரை ஞாபகப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசின் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களும், சித்திரவதைகளும், கொலைகளும் அந்த நாட்டின் சரித்திரத்தில் நீங்காத ஒரு கறையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அனர்த்தங்கள் கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து நடப்பதை நினைவூட்டிய சியோன் அவர்கள் தான் தமிழர்களுடன் சேர்ந்து ஒரு விடியலை தேடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை அரசினது மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள், தமிழின அழிப்புகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இதனை ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக்கொண்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க உதவும் என்று கூறிய சியோன் அவர்கள் உலக நாடுகள் தமிழருக்கு எதிரானஇலங்கை அரசின் செயல் ஒரு இனவழிப்பாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்திய சியோன் அவர்கள், தமிழருக்கு உரித்தான சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்க்கான போராட்டம் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகாலம் தமிழருக்கு மிகவும் கடுமையான காலம், நிகழ்காலம் ஒரு நீண்ட பயணமாக இருக்க போகின்றது.

தானும், தொழிற் கட்சியும் தமிழர்களுடன் தோளோடு தோளாக பயணிக்க தயார் எனவும் நீதி கிடைப்பதன் மூலம் தான் உண்மையான சமாதானத்தை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக மிச்சம் மற்றும் மோடன் (Mitcham and Morden) தொகுதியின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டோனக் (Siobhain McDonagh) மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சிபோன் மக்டோனக் தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் தொடக்க உறுப்பினர் ஆவர்.

சிபோன் மக்டோனக் தமிழர்களின் தேசிய பிரச்சனையை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் எடுத்துரைப்பவர். தமிழர்கள் சார்பாக பலமுறை ஜெனீவா (Geneva)வில் உள்ள மனித உரிமை ஸ்தாபனமான ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று பரப்புரை செய்துள்ளார்.

தமிழர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஸ்தாபனங்களை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

இதனை தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் உரையாற்றியுள்ளார்.

பிரித்தானிய மாற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பேச்சுக்கள், 2ம் லெப். மாலதி நினைவு பகிர்வு, எழுச்சி நடனங்கள், கவிதைகள், கருத்தரங்கம் மற்றும் எழுச்சி பாடல்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

இதில் உலகின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பல இடங்களிருந்தும் பங்குபற்றாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.