உலகின் முன்னணி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா

Report Print Ajith Ajith in உலகம்
1798Shares

ஹொங்காங்கில் விமர்சகர்களை மௌனமாக்கும் தமது செயற்பாட்டை கண்டித்துள்ள ஐந்து கண்கள் என்று அழைக்கப்படும் மேலைத்தேய நாடுகளுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளையே சீனா இவ்வாறு கடுமையாக எச்சரித்துள்ளது.

ஹொங்காங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சீனா புதிய விதிகளை விதித்ததமையை “ஐந்து கண்கள்” என்ற அணியை உருவாக்கியுள்ள இந்த மேற்கத்தைய நாடுகள் கண்டித்திருந்தன.

சீனா, ஹொங்கொங் மீது கொண்டிருக்கும் தமது கடுமையான போக்கை மாற்றியமைக்கவேண்டும் என்று அந்த நாடுகள் பீஜிங்கை வலியுறுத்தியிருந்தன.

இதற்கு பதிலளித்துள்ள சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர், சீனாவின் விவகாரங்களில் இருந்து விலகி இருக்குமாறு இந்த நாடுகளை எச்சரித்தார், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் கண்கள் பறிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பீய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த செய்தித்தொடர்பாளர்- ஜாவோ லிஜியன், “ஐந்து அல்லது 10 கண்கள் இருந்தால் பரவாயில்லை" என்று கூறியுள்ளார்.

"சீனர்கள் ஒருபோதும் சிக்கலை ஏற்படுத்த மாட்டார்கள். அத்துடன் அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், ஹொங்காங் நிர்வாகம், நான்கு ஜனநாயக சார்பு சட்டமன்ற உறுப்பினர்களை அதன் சட்டமன்ற உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றியது, இதனையடுத்து ஹொங்காங்கின் ஜனநாயக சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிவிலகல்களை அறிவித்தனர்.

இதனையடுத்தே சீனாவுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

you my like this video