தமிழின அழிப்பினை தொடர்சியாக மூடிமறைக்கும் பிரித்தானியா

Report Print Dias Dias in உலகம்
192Shares

இலங்கை அரசிடம் கையளித்த தமது உறவுகளைத்தேடி பல வருடங்களாகப் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இதே அலுவலகம் நிராகரிக்கப்பட்டமை அனைவரும் அறிந்தே, இவ்வாறான செயல்பாடுகளை அவதானிக்கும் போது தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பினை தொடர்ந்தும் மூடி மறைக்கும் கோணத்திலேயே பிரித்தானியாவும் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றது என்று அப்பட்டமாக தெரிகின்றது என பிரித்தானிய தமிழர் இயக்கம் கூறியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொட தொடர்பில் அவ் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி தொடங்கி மார்ச் 23ஆம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது.

அந்தவகையில் 46ஆவது கூட்டத்தொடரில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரடியாக கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என 15.02.2021 அன்று முடிவெடுக்கப்பட்டு விவாதித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாதவிடத்தில் இணையவழி ஊடாக சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கொள்ள முடியும் என்று கூறபப்டுகிறது.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா பொதுச்சபையில் இடம்பெற்ற முறைசாரா கூட்டத்தில் இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தின் முன்மொழிவுகள் தொடர்பாக அதற்கு தலமை தாங்கும் பிரித்தானியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகள் கலந்துரையாடி முடிவுகளை எடுத்து அன்றிலிருந்து அது தொடர்பிலான செயல்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

அதையடுத்து கடந்த தீர்மானங்களினை போன்று இதனையும் இலங்கை அரசின் அனுசரனையுடன் நிறைவேற்றுவதனை நோக்காக கொண்டே அத்தீர்மானத்தின் வரைபினை கடந்த வருடம் டிசம்பர் மாதமே இலங்கை அரசிற்கும் அனுப்பியிருந்தனர்.

அந்தவகையில் 46ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் எமக்கான ஆதரவினைக் கோரி மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளினை இரண்டு மாதத்திற்கு முன்னரே நாம் தொடர்பு கொண்ட போது இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்திற்கான முன்மொழிவினை பிரித்தனியா தமக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரியப்படுத்தியிருந்தனர்.

பிரித்தானியாவினால் அனுப்பிவைக்கப்பட்ட அம் முன்மொழிவு குறிப்பிட்ட அந்த உறுப்பு நாடுகளை பொறுத்த வரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் அந்த முன்மொழிவுகளில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டுமென்ற எந்தவொரு கோரிக்கையும் இடம்பெறவில்லை.

அதனால் இம்முறையும் பிரிவு 2ன் கீழ் கொண்டுவரப்படும் தீர்மானம் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப் போவதில்லை. இலங்கை அரசு கடந்த 12 வருடங்களாக எவ்வாறு காலத்தை இழுத்தடித்தார்களோ அதேபோன்றே இனிவரும் தீர்மானமும் இருக்கப் போகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் பிரிவு 4ன் கீழ் இரண்டாவது தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு எந்தொவொரு நாடும் முன்வரவில்லை.

இது தொடர்பில் உறுப்பு நாடுகளை நாம் தொடர்பு கொண்ட போது இலங்கை விடயத்தைப் பொறுத்தவரையில் பிரித்தானியாவே பொறுப்பாக இருப்பதால் அவர்கள் எதனை முன்மொழிகிறார்களோ அதனை தாம் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள்.

உதாரணமாக 19.02.2021 அன்று நெதர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ஒருவருடன் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது பிரித்தானியாவுடன் தொடர்பு கொள்ளும்படியும் அவர்கள் எடுக்கும் முன்னெடுப்புக்களை தாம் நிச்சயமாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு சூழலில் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியாவினால் கொண்டுவரப்பட இருக்கும் புதிய தீர்மானத்தின் முன்வரைபு தற்போது வெளியாகியிருக்கின்றது.

அதன் சாராம்சத்தைப் பார்க்கையில் வழமை போன்று நலிவான ஒரு தீர்மானமே வெளிவர இருக்கின்றது என புலப்படுகின்றது. அதாவது 18 மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட இருக்கின்றது.

இது கடந்த வருடம் நவம்பர் 16 நியூயோர்க்கில் இடம்பெற்ற முறைசாரா கூட்டத்தில் கலந்துகொண்ட நாடுகளின் தொடர்புகள் ஊடாக எமக்கு ஏற்கனவே தெரியவந்திருந்தது.

அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டது யார் என குறிப்பிடாமல் இலங்கை முழுக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன எனவும், சமுதாயங்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் இத்தீர்மான வரைபில் குறிப்பிடுவதனூடாக தமிழின அழிப்பினை மூடிமறைத்து தமிழர்களுக்கான நீதியினை பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் மறுத்து வருகின்றன.

மேலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என இத்தீர்மானவரைபில் குறிப்பிடப்படுகின்ற அதேவேளை தமிழின அழிப்பு குறித்தோ தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தோ குறிப்பிடப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனை அளிக்கும் விடயமாக உள்ளது.

அதேவேளை மிகவும் கீழ்த்தரமான விடயம் என்னவெனில் இலங்கை அரசினால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினை (OMP) நல்லதொரு முன்னேற்றகரமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசிடம் கையளித்த தமது உறவுகளைத்தேடி பல வருடங்களாகப் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இதே அலுவலகம் நிராகரிக்கப்பட்டமை அனைவரும் அறிந்தே.

இவ்வாறான செயல்பாடுகளை அவதானிக்கும் போது தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பினை தொடர்ந்தும் மூடிமறைக்கும் கோணத்திலேயே பிரித்தானியாவும் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றது என்று அப்பட்டமாக தெரிகின்றது.

அந்தவகையில் தமிழீழ மக்களின் பிரச்சினை பின்னடைவை சந்திப்பதற்கும் மூடிமறைக்கப்படுவதற்கும் பிரித்தானியாவே முன்நின்று செயல்படுகின்றது. தன்னுடைய காலனித்துவ சிந்தனையில் தமிழர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலேயே பிரித்தானியா காணப்படுகின்றது.

அதேவேளை இத்தீர்மானத்தில் இலங்கை அரசு உள்ளக விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிடப்படுவதன் ஊடாக கொலையாளியே தன்னைத் தானே விசாரணை செய்யலாமென்ற பாணியில் வேடிக்கையான ஒரு விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரின் குழுவிடம் அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும் 49ஆவது கூட்டத்தொடரில் முதல் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இரண்டாவது அறிக்கையினை அடுத்த வருடம் செப்டெம்பரில் இடம்பெறும் 51 கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிலுள்ளது.

அதன் பின்னரே வேறு தீர்மானங்கள் தொடர்பில் தாம் சிந்தித்துப்பார்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் என்பது காலநீடிப்புக்கள் ஊடாக நீர்த்துப் போகச்செய்யப்படப் போகின்றது.

இவ்வாறானதொரு சூழலில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள், குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் ஊடாகவும் தமது எதிர்புகளை பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கில நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துவிட்டு அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

அவர்கள் தமிழர்களை தமது தேவைக்குப் பயன்படுத்துகிறார்கள். இதனை சரியாக விளங்கிக் கொண்டால் மாத்திரமே எமக்கான மாற்றங்களை நாம் ஏற்படுத்த முடியும்.

அந்தவகையில் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலக பொறிமுறைக்குள் 9 ஒப்பந்த அமைப்புகளும் மற்றும் 44 சிறப்பு செயல்முறை பிரிவுகளும் உள்ளன.

இந்தப் பகுதிகளை தமிழர்கள் இதுவரை பயன்படுத்தத் தவறிக் கொண்டிருக்கிறோம். இக்குறிப்பிட்ட 9 ஒப்பந்த அமைப்புகளுக்குள் பாதிக்கப்படும் தரப்புகள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

ஆனால் தமிழர்கள் அதற்குள் இதுவரை தமது முறைப்பாடுகளை பதிவுசெய்யவில்லை என்பதே நிதர்சனம்.

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் நாம் ஐ.நா வின் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு அறிக்கையாளர்களுடன் முறைசாரா மற்றும் பொதுவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம்.

அக் கலந்துரையாடல்களின் ஊடாக எமது பக்கத்தினால் அனுப்பப்பட்ட குறிப்பிட்ட முறைப்பாடுகளை விடுத்து தமிழ் சமுதாயத்திடம் இருந்து எந்தவொரு முறைப்பாடுகளும் அங்கு போய்ச் சேரவில்லை என்பது அதில் கலந்து கொண்டோருக்கு தெரியவந்தது.

அந்தவகையில் தமிழர் இயக்கமாகிய நாம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உட்பட மற்றும் பல தமிழ் அமைப்புகளுடன் கூட்டிணைந்து சிறப்பு அறிக்கையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பிய கோரிக்கை மனுக்களின் ஊடாக கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை விடயத்தில் முதல்தடவையாக ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஒன்றிணைந்து பெப்ரவரி 05ம் திகதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கையில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையையும் குறிப்பிட்டிருந்தனர்.

இது தமிழர்களைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய ரீதியில் இதுவரையில் பதினொரு நாடுகளுக்கான சிறப்பு அறிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த குறிப்பிட்ட நாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்புகள் அக் குறிப்பிட்ட நாடுகளில் இடம்பெற்ற இன அழிப்புகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தரவுகளை உடனுக்குடன் ஐ.நாவின் அனைத்துப் பொறிமுறைகளுக்குள்ளும் கொண்டுவந்து சேர்த்ததன் ஊடாகவே அவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடிந்தது.

அவ் வகையில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கச் செய்ய வைப்பது என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் அதி உச்சமாக இதனையே செயல்படுத்த முடியும்.

அதனைக் கூட ஐ.நா வில் இலங்கை விடயத்திற்கு பொறுப்பான பிரித்தானியா கனடா தலைமையில் இயங்கும் இணை அனுசரனை நாடுகள் எமது விடயத்தில் வேண்டுமென்றே நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மேல் குறிப்பிட்ட பதினொரு நாடுகளுக்கும் சிறப்பு அறிக்கையாளர்களை நியமிக்கச் செய்வதில் இதே மேற்கத்தேய நாடுகள் முன்நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் எமக்கான நீதி கிடைக்க வேண்டுமாயின் ஐ.நா மனித உரிமைகள் சபைக்குள் எமது பிரச்சினையை தொடர்ந்தும் பேசுபொருளாகக் கொண்டுவர வேண்டும்.

தற்பொழுது எமது பிரச்சினை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பிரிவு 2ன் கீழ் மட்டுமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிக்கிறது.

அதனை நாம் எமது காத்திரமான செயல்பாடுகள் மூலமாக பிரிவு 4ன் கீழும் விவாதிக்கச் செய்யும்படி மாற்ற வேண்டும்.

அவ்வாறு இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பிரிவு 4ன் கீழ் எமது பிரச்சினை விவாதிக்கப்படும் ஒன்றாக மாறும் இடத்தில், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் சிறப்பு அறிக்கையாளர் தனது அறிக்கையினை சமர்ப்பித்து அதுதொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலத்திலிருந்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் வரையில் நேரம் ஒதுக்கப்படும்.

அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழர்கள் நாம் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டும்.

கடந்த பல வருடங்களாக தமிழர் இயக்கமாகிய நாம் எம்முடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற எமது இணை அமைப்புக்களின் ஊடாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரினை நியமிக்க வேண்டும் எனவும், இலங்கை அரசினை ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.